மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, கெஜ்ரிவாலுக்கு... ... அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்:

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை, சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிபிஐ பதிவு செய்த வழக்கிலும் கெஜ்ரிவாலுக்கு கடந்த 13ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை செயலகத்திற்கு செல்லக்கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என நிபந்தனை விதித்தது. இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அன்று (13ம் தேதி) மாலை திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை 48 மணிநேரத்தில் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தன்னை மக்கள் நேர்மையானவன் என்று சொல்லும்வரை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டேன் என்றும் கூறினார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறினார்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளார். அவர் டெல்லி கவர்னரை இன்று மாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவு அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Update: 2024-09-17 06:07 GMT

Linked news