குடிகார காதலனை திருத்த இளம்பெண் எடுத்த முடிவு: அடுத்து நடந்த சோகம்

கிஷோரும் ராணியும் லிவ் இன் ரிலேஷன்சிப் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

Update: 2024-05-30 06:15 GMT

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ராணி (வயது 38) இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இவர் கணவர் தர்மேந்திரா குடிபழக்கத்திற்கு அடிமையாகி உயிரிழந்தார். கணவரை இழந்த ராணி தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கிஷோர் என்பவர் அறிமுகமானார்.

ராணி - கிஷோர் இருவரும் நட்பு ரீதியில் பழகி வந்தவர்கள் ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். ஆனால் முதல் வாழ்க்கை தந்த அனுபவத்தினால் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதற்கு மட்டுமே ராணி சம்மதித்ததாக கூறப்படுகிறது. மேலும், குடிப்பழக்கம் கொண்ட முதல் கணவரால் தான் அடைந்த வேதனைகளை பட்டியலிட்ட ராணி, அது போல கிஷோரும் இருக்கக்கூடாது என நிபந்தனை விதித்தார். நிபந்தனைக்கு கட்டுப்பட்ட கிஷோருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

லிவ் இன் ரிலேஷன்சிப் முறையில் ஒரே வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சுமார் ஒரு ஆண்டு வரை ராணி - கிஷோர் வாழ்க்கை சுமுகமாக சென்றது. கிஷோரை முறைப்படி திருமணம் செய்துகொண்டு வாழவும் ராணி முடிவு எடுத்திருந்தார். அதற்கு கிஷோரும் சம்மதித்து இருந்தார். ஆனால் அதற்குள் கிஷோரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். இந்த விவரம் ராணிக்கு தெரியவந்தது. இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது.

கிஷோரின் குடிப்பழக்கத்தை நிறுத்த ராணி பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவற்றில் எதுவும் அவரின் முயற்சிக்கு உதவவில்லை. நேற்றும் இதே போன்று ராணி - கிஷோர் இடையிலான வாய்த்தகராறு வெடித்தது. அந்த சண்டை மூண்ட நேரத்தில், இருவரும் ராஜாகி மண்டி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தனர்.

அப்போது கிஷோரை பயமுறுத்தும் நோக்கில் ராணி ஒரு விஷப் பரீட்சையில் இறங்கினார். கிஷோர் குடிப்பழக்கத்தை நிறுத்தாவிட்டால் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கிஷோரிடம் தகராறு செய்தார். மேலும் கிஷோருக்கு பயத்தை உண்டுபண்ணும் நோக்கில் தண்டவாளத்தில் குதித்தவர், பின்னர் எழுந்து வர முயற்சித்தார். ஆனால் அவர் தண்டவாளத்தில் ஏறும் முன்னதாக, அந்த ரெயில் தடத்தில் வேகமாக விரைந்து வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலைக் கண்டு அலறினார்.

உதவிக்கு கிஷோரும், ரெயில் நிலைய பணியிலிருந்த ரெயில்வே போலீசாரும் விரைந்து வந்தனர். ஆனபோதும் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டதில் அவர் பலத்த காயமடைந்தார். எஸ்என் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்