ராகுல் காந்தியின் வயநாடு பயணத்தில் திடீர் திருப்பம்

மோசமான வானிலையால் ராகுல் காந்தியின் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-30 18:56 GMT

புதுடெல்லி,

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகால ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 3 கிராமங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது நிலைமை இன்னும் தெரியவில்லை.

இதற்கிடையே, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி இன்று மதியம் வயநாட்டிற்கு பயணம் செய்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருந்தார். இந்த நிலையில், அவரது பயணம் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் இன்று வயநாடு செல்வதாக இருந்த நிலையில், தற்போது இருவரின் பயணமும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராகுல்காந்தி கூறுகையில்,

"இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் எண்ணங்கள் வயநாடு மக்களுடன் உள்ளன. நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் வயநாடு வருகை தருவோம். வயநாடு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்." என தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்