வயிற்றுப் புண்களால் அவதியா..? அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருட்களே போதும்

கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து ஜூஸாக்கி குடித்து வர வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகும்.

Update: 2024-08-18 05:44 GMT

வயிற்றுப் புண்கள் பொதுவாக பெப்டிக் அல்சர் என்றழைக்கப்படும். இதில் வயிற்றிற்குள் வருகின்ற புண்கள் கேஸ்டிரிக் அல்சர் என்றும், சிறுகுடலின் மேல் பகுதியில் வருகின்ற புண்கள் டுயோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படும்.

வயிற்றுப் புண்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற உணவில் உள்ள "ஹெலிக்கோபேக்டர் பைலோரை" என்ற பேக்டீரியா மூலம் வருகிறது, மன கவலை,மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற உணர்ச்சிகள் குடல் புண்களை உருவாக்க முக்கிய காரணமாக உள்ளது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், நேரம் கடந்து உணவு உண்பது, காரமான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக உண்பது, டீ, காபி அடிக்கடி குடிப்பது, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், தூக்கமின்மை, இரவு அதிக நேரம் கண்விழித்தல், உடல் சூடு போன்ற காரணங்களால் வயிற்றுப் புண்கள் வருகிறது.

வயிற்றுப்புண் நோயில் நெஞ்செரிச்சல், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வாந்தி உணர்வு, போன்ற குறி குணங்கள் காணப்படும்.

வயிற்றுப் புண் நோய்க்கான தடுப்பு முறைகள்:

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான நேரங்களில் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.

டீ, காபி அடிக்கடி அருந்துவதைத் தவிர்த்தல் வேண்டும். டீயில் உள்ள டேனிக் அமிலம் மற்றும் காபியில் உள்ள கபீன் (Caffeine) பசியைத் தடுக்கும் ஆற்றல் உடையது. மிளகாய் அளவோடு எடுக்க வேண்டும், மிளகாயில் உள்ள கேப்சீன் என்ற வேதிப்பொருள் குடலை அரிக்கும் ஆற்றலுடையது. இவைகளால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து வயிற்றில் அமிலத்தன்மை அதிகப்படுகின்றது.

1. உணவில் கட்டாயம் தயிர் சேர்க்க வேண்டும். தயிரில் உள்ள "லாக்டோபேசில்லஸ்" என்னும் நன்மை தரும் பாக்டீரியா குடல்புண் தடுப்பிற்கு மிகச் சிறந்தது.

2. காய்கறிகளில் முட்டைக் கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine) வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை உடையது.

3. கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து ஜூஸாக்கி குடித்து வர நோய் விரைவில் குணமாகும்.

4. சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீர் விட்டு ஏழு முறை நன்கு கழுவி அதனுடன் சிறிதளவு இஞ்சி, புதினா சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம்.

5. மணத்தக்காளி கீரை அல்லது சூப் வாரம் ஒருமுறை அருந்தலாம்.

6. பிரண்டைக் கீரை அல்லது பிரண்டை சூப் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

7. நுங்கு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி பருகலாம்.

8. பழங்களில் ஆப்பிள், மாதுளம் பழம், முலாம்பழம் போன்றவை மிகச் சிறந்தது.

9. சீரகம், கொத்தமல்லி விதைகள் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை அடிக்கடி பருகி வர குடல் புண் விரைவில் குணமடையும்.

10. அகத்திக்கீரை, சீரகம், பூண்டு, இஞ்சி , பெருங்காயம் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.

11. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளான கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், சவ்சவ், முள்ளங்கி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

12. இரவில் ஆறு மணி நேரம் தொடர்ச்சியாகத் தூங்க வேண்டும். இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் பகல் நேரத்தில் கட்டாயம் ஓய்வு எடுத்தல் வேண்டும்.

13. மனக்கவலை, சோர்வு, உளைச்சல் தீர இறை பிரார்த்தனைகள் செய்யலாம்.

சித்த மருத்துவத்தில் கீழே கூறப்பட்டுள்ள மருந்துகளை அருகிலுள்ள சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

1. வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை-5 கிராம், இரவு-5 கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

2. பிரண்டை வடகம்-காலை-1 முதல் இரண்டு, இரவு 1 முதல் இரண்டு சாப்பிட நல்ல பலனை தரும்.

3. குன்மகுடோரி மெழுகு: 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

4. ஏலாதி சூரணம்-1 கிராம், சங்கு பற்பம்-200 மிகி, குங்கிலிய பற்பம்-200 மிகி வீதம் எடுத்து நெய்யில் கலந்து மூன்று வேளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

5. வயிற்றுப் பொருமல் இருந்தால் சோம்புத் தீநீர், ஓமத்தீநீர் இவைகளில் ஒன்றை 5-10 மிலி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்