அடிக்கடி சிறுநீர் வெளியேறுகிறதா..? ரத்த சர்க்கரை அளவை கவனிக்க தவறாதீங்க..!
வேறு மருத்துவ காரணங்களுக்காக உட்கொள்ளும் மாத்திரைகளாலும் சில சமயம் சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.;
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் வெளியேறும், அடிக்கடி உடல் சோர்வும் ஏற்படும். ஆனால் சர்க்கரை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு 80-ல் இருந்து 90 வரை இருக்கும், சாப்பிட்ட பிறகு 150-க்கு மேல் இருக்கும். மாத்திரையை சரியான நேரத்தில் சாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் சிறுநீர் பிரச்சினை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
இந்த பாதிப்பு உள்ளவர்கள், ரத்த சர்க்கரை நிஜமாகவே கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்ய எச்.பி. ஏ1சி பரிசோதனை செய்து பார்க்கலாம். மூன்று மாத ரத்த சராசரி அளவும் (எச்.பி.எ1சி) கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் சிறுநீர் அடிக்கடி கழிப்பதற்கு வேறு ஏதாவது மருத்துவ காரணங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
சிறுநீர் அடிக்கடி கழிப்பதற்கு நீரிழிவு நோய் அல்லாத காரணங்களாக கருதப்படுவது.
1. சிறுநீர் தொற்று
2. புரோஸ்ட்ரேட் பிரச்சினைகள்
3. வேறு மருத்துவ காரணங்களுக்காக உட்கொள்ளும் மாத்திரைகள் (எ.கா- சிறுநீரக பிரச்சினைக்காக உட்கொள்ளப்படும் டையூரிடிக் மாத்திரைகள், மனநல பிரச்சினைகளுக்காக பரிந்துரைக்கப்படும் லித்தியம் மாத்திரைகள்)
4. டயாபட்டிஸ் இன்சிபிடஸ்
5. அதிகமான அளவு மது அல்லது காபி அருந்துதல்
6. சைக்கோஜெனிக் பாலிடிப்சியா- தாகம் இல்லாவிட்டாலும் அதிகமாக தண்ணீர் குடித்தல்.
7. குஷிங் சின்ட்ரோம்
8. ஹைபர்கேல்சீமியா- ரத்தத்தில் அதிகமான அளவு கால்சியம் இருக்கும் நிலை
சிறுநீரகப் பிரச்சினை தீர, மருத்துவரை கலந்தாலோசித்து சிறுநீர் அடிக்கடி கழிப்பதற்கு மேற்கண்ட பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்று காரணமா என்பதை பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
இதேபோல் 50 வயதை நெருங்கும் சிலருக்கு குளிர் காலத்தில் இரவு படுக்கைக்கு சென்ற பின் 4 முதல் 6 முறை வரை சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து செல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். பொதுவாக 40 வயதை கடந்தவுடன் நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாகிவிடுகிறது.
நீரிழிவு நோயின் முக்கிய மூன்று அறிகுறிகள்
1. (Polyuria) பாலியூரியா - அடிக்கடி சிறு நீர் கழித்தல்.
2. (Polydipsia) பாலிடிப்சீயா - அதிகமான தண்ணீர் தாகம் எடுத்தல்.
3. (Polyphagia) பாலிபேஜியா- அதிகமான பசி எடுத்தல்.