வாயுப் பிரச்சினையை போக்கும் சித்த மருந்துகள்
மோரில் சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் வறுத்த பெருங்காயத்தூள் சேர்த்து குடிக்கலாம்.
வாயுப் பிரச்சினை பற்றி சித்த மருத்துவத்தில் விரிவாக சித்தர்கள் கூறியுள்ளனர். சித்த மருத்துவத்தில் வாயுக்கள் பத்து வகைப்படும்.
1. பிராணன்: உயிர்க்காற்று
2. அபானன்: கீழ் நோக்கு காற்று
3. வியானன்:பரவு காற்று
4. உதானன்: மேல் நோக்கு காற்று
5. சமானன்: நடுக் காற்று
6. நாகன்:
7. கூர்மன்:
8. கிருகரன்:
9. தேவதத்தன்:
10. தனஞ்செயன்:
இந்த வாயுக்கள் நாடி, நரம்புகளில் இயங்குகின்றன என்று திருமூலர், திருமந்திரத்தில் கூறுகிறார்.
வயிற்றில் எவ்வாறு வாயு உருவாகிறது?
1) உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம்.
2) குடலில் உணவு செரிக்கும்போது, அங்கு இயல்பாகவே இருக்கும் லேக்டோ பேசில்லை போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்கள் நிகழும்போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன. தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.
சாதரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயுதான் இருக்கும். குடலில் உள்ள வாயுக்கள் ஏப்பம் மூலம் வாய் வழியாக, அல்லது ஆசனவாய் வழியாக வெளியேறும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. வாயு மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி வெளியேறவில்லை என்றால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து முதுகுப் பிடிப்பு, நெஞ்சு வலி, விலாப் பக்கத்தில் வலி, தலைவலி இவற்றை உருவாக்குகிறது. (மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு உண்பது நல்லது)
வாயுப் பிரச்சினை நீங்க..
1. தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவை காலந் தவறாமல் எடுக்க வேண்டும்.
2. சீரகம் (சீர்+அகம்), உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் சீரகத் தண்ணீர் தினமும் குடித்து வந்தால் வாயுப் பிரச்சினை குறையும்.
3. சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை சாதத்துடன் கலந்து உப்பு, நெய் சேர்த்து சாப்பிட வாயுப் பிரச்சினை நீங்கும்.
4. மோரில், வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.
5. ஒமத் தீநீர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.
சித்த மருத்துவம்
1. ஏலாதி சூரணம்-1 டீஸ்பூன் அல்லது இரண்டு மாத்திரை வெந்நீரில் எடுக்க வேண்டும்.
2. சீரக வில்வாதி லேகியம் அல்லது வில்வாதி லேகியம் -காலை, இரவு சாப்பிட வேண்டும்.
3. குன்ம குடோரி மெழுகு -250-500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்.