நீரிழிவு நோயாளிகளின் கால் கட்டை விரலில் காயம் ஆறாமல் இருக்கிறதா..? கவனம் தேவை
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள் ஏற்பட்டால் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும். சிலருக்கு கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும். காயம் நாளுக்கு நாள் மோசமடைந்து சிலருக்கு விரலை அறுவை சிகிச்சை செய்து துண்டித்து எடுக்கும் நிலையும் ஏற்படும். இதற்கான காரணங்களை பார்ப்போம்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு புண் ஆறாமல் இருப்பதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். கால் கட்டை விரலில் இழைய அழுகல் (கேங்கரீன்) ஏற்பட்டால் மட்டுமே, வேறு வழியில்லாமல் கால் விரலை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் துண்டிக்க நேரலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து கேங்கரீன் உண்டாகும்.
ஆனால், ரத்த சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் இதை தடுக்கலாம். புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிதல், உடல் எடை குறைத்தல் போன்றவையும் கேங்கரீன் வராமல் தடுப்பதற்கு சில வழியாகும்.
மேலும் புண் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், இன்சுலின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் இன்சுலின் கெரடினோசைட்ஸ் மற்றும் என்டோதீலியல் செல்களை மற்ற திசுக்களில் இருந்து புண் ஆறாமல் இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்ச் செய்து புண் சீக்கிரமாக ஆறுவதற்கு உதவி புரிகிறது.