தலைமுடி நன்கு வளர சித்த மருத்துவம்

செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்குத் தடவி வர தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Update: 2024-07-28 06:24 GMT

திரிபலா சூரணம் 2 கிராம், அயப்பிருங்கராஜ கர்ப்பம் 200 மி.கிராம், சங்கு பற்பம் 200 மி. கிராம் அளவு காலை, மாலை என இருவேளை உட்கொண்டு கீழ்க்கண்ட தைலங்கள் ஏதேனும் ஒன்றை பூசிவர முடி செழித்து வளரும்.

1. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 100 மி.லி, கறிவேப்பிலைச் சாறு - 100 மி.லி, நெல்லிக்காய் சாறு - 100 மி.லி, நீல அவுரிச் சாறு - 100 மி.லி, நாட்டு செம்பருத்திப்பூ - 25, கருஞ்சீரகம் - 10 கிராம், கார்போகரிசி - 10 கிராம், அரைக்கீரை விதை - 10 கிராம், தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்

மேற்படிச் சாறுகளை தேங்காய் எண்ணெயில் நன்றாகக் கொதிக்க வைத்து, அதன் பின்பு செம்பரத்தைப் பூ மற்றும் பொடி செய்த மருந்து சரக்குகளைப் போட்டு காய்த்து எடுக்க வேண்டும். (பருவம் - இலை பொரியும் பருவம்) இதை தேய்த்து வர முடி வளரும், நாளடைவில் இளநரையும் மாறும். வயது முதிர்வினால் வரும் நரை ஒரு சிலருக்குத்தான் மாறும்.

2. கரிசலாங்கண்ணிச் சாறு - 100 மில்லி, அறுகம்புல் சாறு - 100 மில்லி, நெல்லிக்காய் சாறு - 100 மில்லி, சின்ன வெங்காயம் சாறு - 100 மில்லி, இவற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 500 மில்லி, ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப்பூ - 25 எண்ணம், கருஞ்சீரகம் - 20 கிராம், வெந்தயம் 20 கிராம் சேர்த்து நன்கு காய்த்து வடிகட்டி வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, தலைவறட்சி நீங்கி முடி அடர்த்தியாக கருமையாக செழித்து வளரும்.

3. எலுமிச்சம் பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் ஆகியவை வகைக்கு 500 மில்லி எடுத்து மூன்று பங்கு நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து தலைமுடிக்கு தடவி வர நரைக் குறையும், தலைமுடியும் நீண்டு அடர்த்தியாக வளரும்.

4. வெள்ளைப் பூவுடைய கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அடையாகத் தட்டி காயவைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் ஊற வைத்து தலைக்குத் தேய்த்தால் முடி கறுத்து, செழித்து வளரும்.

5. செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலைக்குத் தடவி வர தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

6. சிறிது அருகம்புல் சாறு, கரிசலாங்கண்ணி சாறு, சிறிதளவு கார்போகி அரிசி ஆகியவற்றை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சித் தலைக்கு தேய்த்து வர முடி வளரும்.

7. கீழாநெல்லி இலை சாற்றில் சமபங்கு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடித்து தலைக்கு தடவி வர மயிர் உதிர்வதை தடுப்பதோடு புழுவெட்டு ஏற்பட்டு இருந்தாலும் குணமாகும், தலைமுடியும் செழுமையாக வளரும்.

8. வாரம் ஒரு முறை சீயக்காய் பொடி தேய்த்துக் குளிக்க வேண்டும். சீயக்காய் பொடி - தேவையானப் பொருட்கள்: சீயக்காய் - 1 கிலோ, பூந்திக்கொட்டை - 10 கிராம், பூலாங்கிழங்கு - 100 கிராம், கடுக்காய்த்தோல் - 50 கிராம், நெல்லி வற்றல் - 50 கிராம், வெந்தயம் - 50 கிராம், காய்ந்த செம்பருத்திப் பூ - 25, காய்ந்த எலுமிச்சைத் தோல் - 25, காய்ந்த ஆவாரம் பூ - 25, பாசிப்பயத்தம் பொடி - 1/4 கிலோ, வெண்மிளகு - 10 கிராம்

இவற்றை நன்றாக அரைத்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர பொடுகு, பூஞ்சை இவை நீங்கி முடி நல்ல பளபளப்புடன் இருக்கும். 

 

Tags:    

மேலும் செய்திகள்