சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா? பதற்றப்படாமல் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்
பிரீடயாபட்டீஸ் உள்ளவர்கள் மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.;
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் (பிரீடயாபடிஸ்) உள்ளவர்கள், மேற்கொண்டு நோய் தீவிரமடைவதை உணவு கட்டுப்பாட்டால் தடுக்க முடியுமா? என்று பொதுவாக கேட்பதுண்டு. அவர்கள் இந்த நிலையைக் கண்டு பதற்றப்பட தேவையில்லை.
ரத்தச் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட சற்று அதிகமாக இருக்கும் நிலையை பிரீடயாபட்டீஸ் என்று அழைக்கிறோம். இது சர்க்கரை நோய் அல்ல, அதற்கு முந்தைய நிலை. 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் முறை மாற்றங்களால் பிரீடயாபட்டீஸ் பாதிப்புள்ளவர்கள், 10 வருடங்கள் வரை சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கீழ்கண்ட நோய் கண்டறிதல் குறியீடுகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் பிரீடயாபடீஸ் நிலையை நாம் உறுதி செய்யலாம்.
1) வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை 100mg/dl முதல் 125 mg/dl வரைக்குள் என்ற அளவு.
2) குளுக்கோஸ் ஏற்புத்திறன் பரிசோதனையில் (OGTT), 75 கிராம் வாய்வழி குளுக்கோஸ் திரவ வடிவில் குடித்த பின், 2 மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை 140mg/dl முதல் 199 mg/dl வரைக்குள் என்ற அளவு.
3) மூன்று மாத இரத்த சர்க்கரை சராசரி (HbA1c) 5.7 முதல் 6.4 வரைக்குள் என்ற அளவு.
பிரீடயாபட்டீஸ் உள்ளவர்கள் மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கார்போஹைட்ரேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அதிக நார்சத்துள்ள உணவுகள், கீரைகள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் அதிகம் உள்ள கோழி இறைச்சி, மீன் இறைச்சி, முட்டை, பருப்பு வகைகள், ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
செயற்கை குளிர்பானங்கள், சிகப்பு இறைச்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், கொய்யா, பப்பாளி போன்ற குறைந்த கிளைசீமிக் இன்டக்ஸ் பழங்களை உட்கொள்ளலாம். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும். மாத்திரைகள் இல்லாமலே முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பிரீடயாபட்டீஸ், சர்க்கரை நோய் நிலைக்கு மாறுவதை பெரும்பாலும் தடுக்க முடியும்.