சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கோதுமை உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.;

Update:2024-07-24 10:34 IST

சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை உண்பது நல்லதா? அல்லது கோதுமை உணவை உண்பது நல்லதா? என்ற கேள்வி எழுகிறது.

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கோதுமை உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 60 கிராம் அரிசியில் 80 கலோரிகள், 1 கிராம் புரதம், 18 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. கோதுமையில் செய்த ஒரு சின்ன ரொட்டியில், 71 கலோரிகள், 3 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. கார்போஹைட்ரேட் அளவை ஒப்பிடும்போது அரிசி மற்றும் கோதுமையில் ஏறக்குறைய ஒரே அளவு இருந்தாலும், கோதுமையில் சோடியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் பி1, பி2, நியாசின், ஃபோலேட், நார்சத்து, புரதம் ஆகியவையும் அரிசியை விட அதிகம் இருக்கிறது.

மேலும் அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டெக்ஸ்) 72 ஆகும். இது கோதுமையின் கிளைசிமிக் இன்டெக்ஸான 45 விட அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி ஏற்ற உணவாக பொதுவாக கருதப்படுவதில்லை.

இருப்பினும் சர்க்கரை உயர்தல் குறியீடு அரிசியின் வகைகளை பொறுத்து மாறுபடும். சிகப்பு அரசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு கோதுமையின் சர்க்கரை உயர்தல் குறியீடு போலவே மிகக் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் சிகப்பு அரிசியை தாராளமாக சாப்பிடலாம். ஒரு சில சமயங்களில், கோதுமையை விட அரிசி, கீழ்கண்ட பிரச்சினையுள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக விளங்குகிறது.

1) செரிமான பிரச்சினை உள்ளவர்கள்.

2) குளுட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள்.

3) உணவில் சோடியம் அளவை குறைத்து சாப்பிட வேண்டியவர்கள்.

வாழைப்பழம்

இதேபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா? என்றும் பலர் குழப்பத்தில் உள்ளனர்.

ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. வாழைப்பழம் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதை தீர்மானிப்பது அதன் பழுத்த நிலை மற்றும் நாம் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை ஆகும். பொதுவாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளது.

பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள் பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம். பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு சற்று அதிகம். வாழைப்பழத்தில் அதிகமான அளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், பச்சை வாழை போன்ற வாழை வகைகளை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு சிறிய வாழைப்பழம் சாப்பிடலாம். பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழ வகைகள் தவிர்ப்பது நல்லது. வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi

Tags:    

மேலும் செய்திகள்