சபரிமலைக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்து பிரசாதங்களை பெற்றுக்கொள்ளலாம் - தேவசம்போர்டு

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அய்யப்ப பக்தர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.;

Update: 2024-11-29 23:16 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்த தகவல் மையம் 24 மணி நேரமும் செயல்படும். இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்காக அனைத்து தகவல்களும், சேவைகளும் கிடைக்கும். சபரிமலையில் பிரசாதங்களான அப்பம், அரவணை ஆகிய பிரசாதங்களை பெற இங்கு முன்பதிவு செய்யலாம். அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட ரசீதை சபரிமலை மாளிகைபுரம் பகுதியில் உள்ள வங்கி கிளையில் சமர்ப்பித்தால், அங்கிருந்து பிரசாதங்களை பெற்று கொள்ளலாம்.

சபரிமலை பக்தர்கள் அன்னதானம் மற்றும் இதர நன்கொடைகளை கியூஆர் கோடு வழியாகவும், டிஜிட்டல் கார்டு வழியாகவும் வழங்கலாம். கொச்சி விமான நிலைய டிஜிட்டல் சென்டர் வழியாக இதற்கான பண பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் வழிபாடுகள் நடத்த உள்ள இ-காணிக்கை வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்