அட்சய திரிதியை தினத்திற்கு இணையான அட்சய நவமி
அட்சய நவமி நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை ‘ஆம்லா நவமி’ என்று அழைக்கிறார்கள்.;
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் நவமி தினத்தை 'ஆம்லா நவமி' என்றும் 'அட்சய நவமி' என்றும் அழைக்கப்படுகிறது. பிரபோதினி ஏகாதசி அல்லது தேவ் உதானி ஏகாதசிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நவமி வருகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள், தானங்கள் ஆகியவை இப்பிறவியில் மட்டுமின்றி, வரும் அனைத்து பிறவிகளிலும் துன்பங்கள் ஏதுமில்லாமல் சகல வளங்களுடன் நம்மை வாழ வைக்கும் வல்லமை படைத்ததாகக் கருதப்படுகிறது. அட்சய திரிதியை தினத்திற்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்த அட்சய நவமி.
'அட்சய' என்றால் வளர்ந்துகொண்டே இருப்பது என்பதுதான் பொருள். அதனால்தான் அட்சய திரிதியை அன்று தங்கம், வெள்ளி, உப்பு போன்ற மங்கலப் பொருட்கள் வாங்கும் வழக்கம் வந்தது. அந்தப் பொருட்கள் நம் இல்லங்களில் வளர்ந்து நமக்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
அதேபோன்று செல்வ வளத்தை பெருக்குவதோடு மட்டுமல்லாமல், நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும் ஆற்றல் படைத்த நாள் இந்த அட்சய நவமி தினம். இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை 'ஆம்லா நவமி' என்றும் அழைக்கிறார்கள்.
இந்த ஆண்டு அட்சய நவமி தினம் இன்று (10.11.2024) கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை 6.51 மணிக்கு துவங்கி இன்று மாலை 4.59 மணி வரை நவமி திதி உள்ளது. இந்த நேரங்களில் மகா விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வழிபடுவதால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளமும் புண்ணியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பத்மபுராணத்தின்படி நெல்லி மரம், மகா விஷ்ணுவுக்கு உரியது. இந்த மரத்தில், பகவான் விஷ்ணுவும், நெல்லிக்கனியில் மகாலட்சுமியும் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதனால் நெல்லி மரத்தை இன்றைய தினத்தில் பிரதட்சணம் வந்து வழிபட்டால் செல்வ வளம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கும். அத்துடன், ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். ஆம்லா நவமி அன்று நெல்லி மரத்தின் இலைகளைக் கொண்டு மகாவிஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் இந்த தினத்தை, 'ஜகதாத்ரி பூஜை' என்று கொண்டாடுகிறார்கள். வட மாநிலங்கள் அனைத்திலும் இதை 'ஆம்லா நவமி' என்று சிறப்பித்து கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் விரதம் அனுசரித்து மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமி தாயாரையும் வழிபடுகிறார்கள்.