புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை
தெருவில் செல்லும் பொழுது கும்பிட்டுப் பேசுபவர்களாக விளங்கும் சிம்ம ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே தனாதிபதி புதனும், தன ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி - சுக்ரன் சஞ்சாரம்
புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், நீச்சம் பெறுவதால் ஒருசில காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பெண்வழிப் பிரச்சினைகள் குறுக்கிடும். உடன்பிறப்பு களின் ஆதரவு குறையும். தொழில் செய்பவர்கள், யாரையும் நம்பி செயல்பட முடியாது. ஜீவன ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுங்கள்.
கன்னி - புதன் சஞ்சாரம்
புரட்டாசி 16-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன, லாபாதிபதியானவர் புதன். கன்னி ராசி என்பது புதனுக்கு சொந்தவீடு மட்டுமல்லாமல் உச்ச வீடும் ஆகும். எனவே தனாதிபதி உச்சம் பெறும் இந்த நேரம் தனவரவு அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தங்கு தடைகள் தானாக விலகும். அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பணி உயர்வு கிடைக்கும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரம்தான். பூமி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
செவ்வாய், சனி பார்வை உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் நம்பிக்கைக்குரியவர்கள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சனி வக்ர நிவர்த்தி
புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 6,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, விபரீத ராஜயோக அடிப்படையில் ஒருசில நன்மைகளை தந்தாலும் குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். சனிக் குரிய வழிபாடுகளை மேற்கொள்வதால் சங்கடங்கள் அகலும்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும், அபிராமி அம்மன் வழிபாடு ஆனந்த வாழ்வு தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 26, 27, 30, அக்டோபர்: 1, 2, 11, 12, 15, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் சுபவிரயங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர்கால நலன்கருதி செய்த ஏற்பாடுகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் கல்யாண முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்து ஆதரவு உண்டு. கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.