ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை
நல்ல காரியங்கள் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இம்மாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுகின்றார். எனவே 'நீச்ச பங்க ராஜயோக' அடிப்படையில் கிரக பலன்கள் வந்து சேரும். எனவே எந்தக் காரியமும் முதல் முயற்சியில் வெற்றி அடையா விட்டாலும், அடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையும், ஆன்மிகப் பெரியவர்களின் அறிவுரையும் கைகொடுக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி உண்டு.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் கூடுதலாக இருக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே என்று கவலைப்படுவீர்கள். இட மாற்றங்களும், வீடு மாற்றங்களும் இனிமை தரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். குறிப்பாக அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் குரு விளங்குவதால் பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் மேற்பார்வையிலேயே பிள்ளைகளை வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலை தூக்கலாம். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைய குருவை வழிபடுவது நல்லது.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறும்பொழுது தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறும் சூழ்நிலை உண்டு. உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றம் ஏற்படலாம். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் வரலாம்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். தன லாபாதிபதி சுக ஸ்தானத்திற்கு வரும்பொழுது தனவரவு திருப்தி தரும். சுகங்களும், சந்தோஷங்களும் கூடும். குறுக்கீடு சக்திகள் அகலும். நெருக்கடி நிலை மாறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை உயரும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:அக்டோபர் 18, 19, 29, 30, நவம்பர் 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.