தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை
எவரையும் எளிதில் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்ற சிம்ம ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் சுக்ரனோடும், சனியோடும் இணைந்து 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். குரு பார்வையால் வரவு திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும். இதுவரை ஸ்தம்பித்து நின்ற தொழில் வெற்றிநடை போடும். யோககாரகன் செவ்வாயும் பலம்பெற்று இருப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரனோடும், சனியோடும் இணைந்து மகரத்தில் சஞ்சரிக்கிறார். மீனத்தில் குருவும், தனுசில் புதனும், ரிஷபத்தில் செவ்வாயும் வீற்றிருக்கிறார்கள். சகாய ஸ்தானத்தில் இருக்கும் கேது, சந்திரனோடு இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
3-ல் கேது இருப்பதால் சகோதர வழியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பாகப்பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கும். வாங்கிய சொத்துக்களில் ஒரு பகுதியை விற்றுவிட்டு அதில் வரும் மூலதனத்தைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியில் கொடுத்த கடன்கள் படிப்படியாக வசூலாகும். ஸ்தம்பித்து நின்ற தொழில் வெற்றிநடை போட எடுத்த முயற்சி கைகூடும். பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமையும் நேரம் இது.
சூரியன் - சனி சேர்க்கை
உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் 6-ம் இடத்தில் எதிரிகள் ஸ்தானத்தில் சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பகைக் கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. என்றாலும் சகாய ஸ்தானாதிபதி சுக்ரனும், சனியோடு இணைந்திருப்பதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. சில தடைகளும், தடுமாற்றங்களும் வந்தாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். ஒரு சிலருக்கு பொறுப்புகள் மாறலாம். எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பது அரிது. பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு கூடும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். எந்த இடையூறு வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் கண்ணும், கருத்துமாக இருப்பது கண்டு பாராட்டுவர். இடமாற்றம், இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் கேட்ட சலுகைகளைப் பெறுவீர்கள்.
கும்ப - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை மாதம் 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். சப்தம ஸ்தானத்திற்கு சுக்ரன் வரும்பொழுது மிகுந்த நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் உண்டு. பொருளாதாரநிலை உயரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
மகர - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். மகரத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது, தனவரவில் இருந்த தடைகள் அகலும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
இம்மாதம் தென்முகக் கடவுளை இன்முகத்தோடு வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 17, 18, 28, 29, பிப்ரவரி: 1, 2, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.