ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை
சகலக் கலைகளிலும் வல்லவர்களாக விளங்கும் சிம்ம ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது. தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கண்டகச்சனியின் ஆதிக்கம் இருப்பதால் இடையிடையே ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு நிவர்த்தியாகும்.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அதுமட்டுமல்லாமல் சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். அரசாங்க உதவியை நாடுபவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்திலேயே பணி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படும். சேமிப்பு உயர எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. சுபச்செலவுஅதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் உதவிகள் கிடைத்து தொழில் வளர்ச்சி கூடும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையும் உண்டு. குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் மருத்துவம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் குருவின் பார்வை, செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவதால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில முக்கியப் பொறுப்பு கிடைக்கும். மேல்மட்டத் தலைவர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் உதவியோடு முன்னேற்றம் காண்பீர்கள்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், விரய ஸ்தானத்திற்கு வரும்போது கட்டுக்கடங்காத வகையில் செலவு ஏற்படும். பெற்றோரின் மணிவிழா, பிள்ளைகளின் மணவிழா, இடம், பூமி வாங்கும் அமைப்பு, வாகன மாற்றம் போன்றவற்றுக்காக செலவிட்டு, வீண்விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக்கொள்ள இயலும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவோடு மிகச்சிறந்த பொறுப்புகள் வரலாம். வியாபாரம், தொழில் செய்பவர்கள் புதிய கிளை திறக்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகப் பொறுப்புகள் கூடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு வெற்றி வாகை சூடும் அமைப்பு உண்டாகும். பெண்களுக்கு மனநிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படும் நேரம் இது. பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை கூடும். அதற்கேற்ப ஊதிய உயர்வு வந்து சேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 26, 27, 30 ஜூலை: 1, 2, 11, 12, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.