கடகம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்

Update: 2023-08-17 18:45 GMT

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

பொது வாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மாதத்தின் இடையில் கண்டகச் சனியாக மாறப்போகிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீண் விவகாரங்கள் பலவும் வீடு தேடி வரும். வாகனத் தொல்லைகளால் மன வாட்டம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்வதனால், கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதப்படும். கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்கக் கூடிய நேரம் இது.

கடக - சுக்ரன்

ஆவணி 1-ந் தேதி முதல், உங்கள் ராசியான கடகத்திற்கு சுக்ரன் வருகிறார். சுக - லாபாதிபதியான சுக்ரன், வக்ர நிலையில் உங்கள் ராசிக்கு வருவது யோகம்தான். ஆரோக்கியப் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வானங்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். 'புதியதாக சொத்துக்கள் வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படலாம்.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், சகாய ஸ்தானத்திற்கு வருவதால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். உங்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள் இப்பொழுது விலகிச் செல்வர். உற்றார் - உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாற்று இனத்தவர்களின் ஆதரவும் திருப்தி தரும். தொழில் வியாபாரம் சூடுபிடிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்பான பதவிகள் கிடைக்கும். மக்கள் சேவையில் ஈடுபட்டு மகத்தான புகழைப் பெறுவீர்கள்.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம், வளர்ச்சியில் கொஞ்சம் தளர்ச்சியைக் கொடுக்கலாம். கண்டகச் சனி என்பதால், கவலை அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். சில காரியங்களை யோசிக்காமல் செய்துவிட்டு, பிறகு 'ஏன் செய்தோம்?' என்று வருத்தப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியாது. தெய்வ வழிபாட்டிலும் கவனம் செலுத்த இயலாது. உற்றார், உறவினர்களின் பகையும், மற்றவர்களின் கருத்து வேறுபாடுகளும் மனதை வாட்டும். அனுபவஸ்தர்கள் மற்றும் அருளாளர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். விரயாதிபதி வக்ர நிவர்த்தியாவதால் விரயங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், நாடு மாற்றம் வந்து சேரும். 10-ல் குரு இருப்பதால் அதன் பார்வை புதன் மீது பதிகிறது. எனவே காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மறைமுகப் போட்டிகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்களில் தாமதம் ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் இருந்து அழைப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 18, 19, 21, 22, செப்டம்பர்: 2, 3, 6, 7, 13, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

மேலும் செய்திகள்