தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை
மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயலாற்றும் கடக ராசி நேயர்களே!
இம்மாதம் உங்கள் ராசிநாதன் சந்திரனோடு கேது இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே மனக்குழப்பம் அதிகரிக்கும். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் மருத்துவச் செலவு உண்டு. 9-ம் இடத்தில் இருக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசியில் பதிவதால் குரு வழிபாட்டால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடலாம்.
மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் கேதுவும், தொழில் ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். தனுசில் புதனும், மகரத்தில் சூரியன், சனி, சுக்ரனும், ரிஷபத்தில் செவ்வாயும் சஞ்சரிக்கிறார்கள். பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே. உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. ஊர் மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பாராத விதத்தில் வரலாம்.
சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் மருத்துவச் செலவு உண்டு. தன்னிச்சையாக செயல்படுவீர்கள். சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழல் உருவாகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர்.
சூரியன் - சனி சேர்க்கை
உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவர் கண்டகச் சனியோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது, அளவிற்கு அதிகமான விரயங்கள் ஏற்படலாம். உறவினர்களாலும், நண்பர்களாலும் தொழிலாலும் தொல்லைகள் ஏற்படும். திடீர் விரயங்களை சமாளிக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். கடன் சுமை பெருகிக் கொண்டே போகும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். உற்றார், உறவினர்களின் பகை அதிகரிக்கும்.
பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. உத்தியோக உயர்வு மட்டுமல்லாமல் சம்பள உயர்வும் தாமதமாகலாம். நெருக்கமாக இருந்த மேலதிகாரிகள் கூட உங்களை விட்டு விலக நேரிடலாம். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்துசேரும். உறவினர்களுக்கு நன்மை செய்தால் கூட, அவர்களுக்கு அது தீமையாகத் தெரியும். கவனம் தேவை. பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
கும்ப - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது நன்மைதான். அசுர குரு மறைவிடத்தில் சஞ்சரிக்கும் போது எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய பொறுப்புகள் வந்துசேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள் வீர்கள். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மகர - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். சப்தம ஸ்தானத்திற்கு புதன் வரும்பொழுது, 'புத சுக்ர யோகம்' செயல்படும். இதனால் பொருளாதார நிலை உயரும். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
இம்மாதம் சிவன் - உமையவள் வழிபாடு சிறப்புகளை வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 15, 16, 17, 26, 27, 30, 31, பிப்ரவரி: 7, 8, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.