வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை
மற்றவர்களின் தேவையை அறிந்து உதவும் கடக ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்களுக்கு யோகம் செய்யும் கிரகம் வலிமை இழந்திருப்பதால், நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் போகலாம். அஷ்டமத்தில் சனி அடியெடுத்து வைத்திருப்பதால், புது முயற்சிகளில் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் இருக்காது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது அரிது. ஆரோக்கிய சீர்கேடுகள் அவ்வப்போது தலைதூக்கும். எதைச் செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளையும், அருளாளர்களின் ஆசிகளையும் பெற்றுச் செய்யுங்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
ராகு-கேது சஞ்சாரம்
மாபெரும் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்களை, 'சாயா கிரகம்' என்று அழைப்பது வழக்கம். பின்னோக்கி நகரும் அந்த கிரகங்கள் வழிபாட்டின் மூலம் நமக்கு முன்னேற்றத்தை வழங்கும். 10-ல் இருக்கும் ராகுவோடு குருவும் இணைந்திருப்பதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உடன் இருக்கும் பணியாளர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். அதே நேரத்தில் சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் உடல்நலத்திலும், தாயின் உடல்நலத்திலும் மிகுந்த கவனம் தேவை. வீட்டில் உபயோகப்படுத்தும் விலை உயர்ந்த பொருட்கள் அடிக்கடி பழுதாகி அயர்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. ராகு-கேதுக்களுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.
கடக - சுக்ரன்
வைகாசி16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் அங்கு நீச்சம் பெற்று சஞ்சரிக்கும் செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். எனவே தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். சேமிப்பு உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாறலாம். தாய்வழி ஆதரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் இதுவரை பகை பாராட்டிய மேலதிகாரிகள் இப்பொழுது இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும்.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடத்திற்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வருகையில் விரயத்திற்கேற்ற வரவு வந்துகொண்டே இருக்கும். வீண் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ள முன்வருவீர்கள். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பங்கள் கூடிவரும். சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். 'படிப்பிற்கேற்ற வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, புதிய பாதை புலப்படும். தொழில் செய்பவர்கள், விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு, சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரலாம். மாணவர்களுக்கு மறதி அதிகரிக்கும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. கணவன் - மனைவி ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 16, 17, 21, 22, 27, 28, ஜூன்: 1, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.