ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை
எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையிலேயே இருக்கும் கடக ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதோடு சனியை, செவ்வாய் பார்க்கும் அமைப்பும் உள்ளது. எனவே அலைச்சலைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக விரயங்கள் மனக்கவலையை உண்டாகும். இரவு நேரப் பயணங்களை மாற்றிக் கொள்வது நல்லது. பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்வதோடு பணியில் உள்ள மேலதிகாரிகளையும் அனுசரித்துச் செல்லுங்கள். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றம், உத்தியோக மாற்றம், இடமாற்றம் போன்றவை தானாக வந்து சேரும். வரும் மாற்றங்களால் நன்மை உண்டு.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். 10-ல் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும் என்பது பழமொழி. ராகுவோடு இணைந்திருக்கும் குரு பகவான், கேதுவைப் பார்க்கிறார். எனவே வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமைய, வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். எப்படி இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலன் உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. குடும்ப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் சுபகாரியங்கள் நல்ல முடிவிற்கு வரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட் களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாய் மாறும்.
குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் ஆரோக்கியம் சீராகும். வீடு மாற்றம், இடமாற்றம் மகிழ்ச்சி தரும். நல்ல காரியங்கள் படிப்படியாக நடைபெற வழிபிறக்கும். 6-ம் இடத்தையும் குரு பார்ப்பதால் உத்தியோக முன்னேற்றம் உண்டு. ஒருசிலர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையப் புதிய வழிபிறக்கும். வாழ்க்கைத் தரம் உயர புதிய முயற்சி எடுப்பீர்கள்.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது நன்மை - தீமைகள் கலந்தே நடைபெறும். குறிப்பாக வருமானம் உயரும். ஒரு சிலருக்கு வீடுமாற்றம், இடமாற்றம் வரலாம். தூர தேசத்திலிருந்து வரும் வேலைக்கான அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். உங்கள் முன்னேற்றத்தையும் முன்னதாகவே சொல்வதன் மூலம் பாதிப்புகள் ஏற்படும். வாகனப் பழுதுகளும், வாகன மாற்றங்களும் வந்துசேரும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போராடி வெற்றிபெறும் யோகம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்கள் போட்டிகளைத் தாண்டி லாபம் குவிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் அதிகரித்தாலும் வருமானம் ஓரளவு வந்து கொண்டே இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 21, 22, 26, 27, ஆகஸ்டு: 6, 7, 11, 12, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.