கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை
பிறருக்கு சேவை செய்வதை பெருமையாகக் கருதும் கடக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் சனி பகவான், கண்டகச் சனியாக விளங்குகிறார். எனவே திட்டமிட்டபடியே எதையும் செய்ய இயலாது. திடீர் மாற்றங்களால் மனக்கலக்கம் ஏற்படும்.
சனி மற்றும் குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகி இப்பொழுது பலம்பெற்று சப்தம ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். சனிக்கு மற்றொரு பெயர் 'மந்தன்.' மந்த கதியில் இயங்குபவர். அவர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கும் மந்த நிலை உருவாகும். திடீரென வீறுகொண்டு எழுந்து செயல்படுவீர்கள். பாதி செயல்படும்பொழுதே உற்சாகமும், தன்னம்பிக்கையும் இழந்து உட்கார்ந்து விடுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியிலும், குடும்ப உறுப்பினர்கள் மூலமும் பிரச்சினைகள் வந்து அலைமோதும். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 9-ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கிறார். வக்ர நிவர்த்தியாகிப் பார்ப்பதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய திருப்பங்கள் உருவாகும். பண்புமிக்க நண்பர்களின் பழக்கத்தால் சில காரியங்கள் முடிவடையும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மேல் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். உத்தியோகத்தைப் பொறுத்து, தற்காலிகப் பணியில் அமர்ந்தவர்கள் நிரந்தரப் பணியாளராக வாய்ப்பு உண்டு.
தனுசு - புதன் சஞ்சாரம்
கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் வந்து சேரும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் சம்பந்தமாக அல்லது தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். இந்த நேரத்தில் பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழிவகுத்துக் கொடுப்பர். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
ரிஷப- செவ்வாய் சஞ்சாரம்
கார்த்திகை 13-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அருளாளர்களின் சந்திப்பால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். சொத் துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 'வாங்கிய சொத்தை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு மீண்டும் சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.
தனுசு - சுக்ரன் சஞ்சாரம்
கார்த்திகை 21-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 6-ம் இடத்திற்கு வரும்பொழுது உடல்நலனில் கவனம் தேவை. உடன் இருப்பவர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். வருமான பற்றாக்குறையின் காரணமாக ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
இம்மாதம் திங்கட்கிழமைதோறும் முருகப்பெருமானை முத்தமிழ் பாடி வணங்குவதன் மூலம் தித்திக்கும் வாழ்க்கை அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 18, 22, 23, டிசம்பர்: 2, 3, 4, 7, 8, 14,15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குரு வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியைப் பார்ப்பதால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல்- வாங்கல்கள் திருப்தியாகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். கணவன் - மனைவி உறவு திருப்தி தரும். பிள்ளைகளுக்கான கடமைகளைச் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மதிப்பு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது சிரமம்தான். அதிகாரிகளின் வார்த்தைகளுக்கு மதிப் பளிப்பது நல்லது. வீடு, வாகனம் வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும்.