ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை
எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக முடிக்கும் கும்ப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். சில நாட்கள் கழித்து அந்த வக்ர இயக்கத்தோடு விரய ஸ்தானத்திற்கும் வருகிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் பற்றாக்குறையும் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை குறிப்பிட்டபடி செய்ய இயலாது. வழிபாட்டினை மேற்கொள்வதன் மூலம் வக்ரச் சனியின் காலத்தில் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள இயலும்.
கடக - சுக்ரன்
ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். எதையும் தன்னிச்சையாகச் செய்ய இயலாது. மனஅழுத்தம், நிம்மதியின்மை போன்றவை ஏற்படலாம். தொழிலில் பங்குதாரர்கள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலுவலகத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை.
கன்னி -செவ்வாய்
ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே மிகுந்த பொருள் விரயம் ஏற்படும் நேரமிது. குறைந்த செலவில் முடிவடைய வேண்டிய காரியம் அதிகச் செலவில் முடியும். ஒருவேலையை ஒருமுறைக்கு இருமுறை செய்யும் நிர்பந்தம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. வம்பு, வழக்குகள் வாசல் தேடி வரலாம். அஷ்டமத்துச் செவ்வாய் மாறும்வரை முறையான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
மகர - சனி
சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, வக்ர இயக்கத்திலேயே மகர ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயங்களைச் சந்திக்க நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரப் போட்டி அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தின் காரணமாக பல நல்ல வாய்ப்புகளை நழுவவிட நேரிடும். 'விரிவு செய்த தொழிலை தொடர்ந்து நடத்த மூலதனம் இல்லையே' என்று கவலைப்படுவீர்கள்.
புதன் வக்ர நிவர்த்தி
சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் பலம் பெறும் இந்த நேரம், பிள்ளைகளின் சுபாகரியப் பேச்சுக்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பாகப்பிரிவினைகள் நடைபெற்றால் அது திருப்தி தரும். தேகநலன் படிப்படியாகக் குணமாகும். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் யோசித்துச்செய்வது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காக உயரும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 22, 23, 26, 27, செப்டம்பர்: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.