கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

Update: 2023-04-13 18:45 GMT

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

நட்பால் நன்மையைப் பெறமுடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடக்கின்றது. எனவே எதிலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திலும் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். ஒருசில வேலைகளை ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செய்யும் சூழ்நிலை ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கலாம். பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்க போதுமான அளவு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பயணங்களைத் திடீர் திடீர் என மாற்றியமைப்பீர்கள். சனி உங்கள் ராசிநாதன் என்பதால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பிரச்சினைகளைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். இதுவரை விரயச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். வாக்கிய கணித ரீதியாக இந்தச் சனிப்பெயர்ச்சி சில மாதங்கள் தான் என்றாலும், உங்கள் ஜாதக அடிப்படையில் எத்தனையாவது சுற்று என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு இரண்டாவது சுற்றாக இருந்தால் ஓரளவு நன்மை கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகல, புதிய பாதை புலப்படும். முதல் சுற்றாகவோ, மூன்றாவது சுற்றாகவோ இருந்தால் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பின் பெயரில் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்காமல் இருக்க விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. உத்தியோகத்தில் பணி ஓய்விற்குப் பிறகு பணி நீடிப்பு கிடைக்கலாம்.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி, மேஷ ராசிக்கு குரு பகவான் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் அந்த இடங்கள் புனிதமடைகின்றன. எனவே திருமண வயதுள்ளவர்களுக்கு இனிய இல்லறம் அமையும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். நெருக்கடி நிலை அகன்று நிம்மதி கிடைக்கும். பிரிந்தவர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நடக்கும் தொழிலை விரிவுபடுத்த, கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு. வீடுகட்ட, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது நிறைவேறும்.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும். பிரச்சினைகள் பலவற்றில் இருந்தும் விடுபடுவீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் வளர்ச்சி திருப்திதரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். ஊர் மாற்றங்கள் கேட்டபடியே கிடைக்கும்.

இம்மாதம் மாரியம்மன் வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 18, 19, 23, 24, மே: 4, 5, 9, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

மேலும் செய்திகள்