பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை
செயலாற்றல் மிக்கவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி மாதத் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பங்குனி 14-ந் தேதி வரை விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதிலும் சற்று நிதானமும் கவனமும் தேவை. ஒருசில வேலைகளை ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழல் உருவாகும். மனக்குழப்பம், ஆரோக்கியத் தொல்லை, தொழில் வளர்ச்சியில் இடையூறு, பொருளாதார நெருக்கடி, குடும்பத்தில் குழப்பம் போன்றவற்றை சந்திக்க நேரிட்டாலும் சனி உங்கள் ராசிநாதன் என்பதால் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார்.
இம்மாதம் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே பிள்ளைகள் வழியில் விரயங்கள் உருவாகலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும். குறைந்த செலவில் முடிய வேண்டிய காரியம், பெரிய செலவைக் கொண்டு வந்து சேர்க்கும். கடின உழைப்பின் மூலமே வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, மேலதிகாரிகளின் அனுசரிப்புக் குறையலாம்.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலத்தில் இனிய சம்பவங்கள் அதிகம் நடைபெறும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் வரும். வாதாடும் நிலை மாறி வாழ்க்கை சீராகும். தொழில் வளர்ச் சிக்கு வேண்டிய தொகை, கேட்ட இடத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்து எடுபடும். கடன் பிரச்சினைகளால் ஏற்பட்ட கலக்கம் அகலும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக இருப்பர்.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நிரந்தர வருமானம் கிடைக்க வழி பிறக்கும். முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். காரிய வெற்றியடைய ஓய்வின்றி பணிபுரிவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தேகநலன் சீராகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நேரம் இது. ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் உள்ளவர்களுக்குப் போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். கலைஞர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். மாணவ - மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும், வழிகாட்டுதல்களும் சிறப்பாக அமையும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் பெண்கள் தங்கள் ஆரோக்கி யத்தைச் சீராக்கிக் கொள்ளலாம். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து வருமானம் வரலாம். இல்லற வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் அகலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 15, 16, 22, 23, 26, 27, ஏப்ரல்: 8, 9, 13.
மகிழ்ச்சி வண்ணம்:- மஞ்சள்.