மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை
பிறர் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். அதே நேரம் தன ஸ்தானத்தில் குருவும் சொந்த வீட்டில் இருக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உங்கள் ராசிநாதன் சனியோடு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் இணைந்திருக்கிறார். உங்கள் ராசியில் சூரியன், சுக்ரன் சேர்க்கை பெற்றுள்ளனர். சுக ஸ்தானத்தில் செவ்வாய் வீற்றிருந்து தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் குருவின் பார்வை பதிகிறது. எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பிரிந்த உறவு மீண்டும் ஒன்று சேரும். நட்பால் நன்மை கிடைக்கும். தற்காலிகப் பணியில் உள்ளவர்கள் நிரந்தரப் பணியாளராக மாறும் வாய்ப்பு உண்டு.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி கும்ப ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம- அஷ்டமாதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் போது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். விரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பாகப்பிரிவினைக்காக முயற்சி செய்திருந்தவர்களுக்கு, காரியம் சுமுகமாக கைகூடும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால் பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வீடு வாங்கும் முயற்சியில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தென்படும். 'வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து, உதிரி வருமானம் வந்துசேரும். உத்தியோக உயர்வால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் ெசல்கிறார். அங்கிருந்து கொண்டு மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போகிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பணிபுரியும் இடத்தில் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. வேறு இலாகாவிற்கு மாறும் சூழ்நிலை கூட உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- பிப்ரவரி: 16, 17, 23, 24, 27, 28, மார்ச்: 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடுதலாக இருக்கும். எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் மன அமைதி ஏற்பட, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உடன்பிறப்புகளின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.