கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை
தடைகளைக் கண்டு தளராத உள்ளம் படைத்த கும்ப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் தனாதிபதி தன ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் வந்து கொண்டேயிருக்கும். எனவே எடுத்த காரியங்கள் எளிதில் முடியும். இடமாற்றம், வீடு மாற்றங்களில் ஆர்வத்தை காட்டுவீர்கள்.
சனி மற்றும் குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் இப்பொழுது விரய ஸ்தானத்தில் பலம்பெற்றிருக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். குடும்பச் சுமையும் அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. தோல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய் தோன்றி மறையும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ர நிவர்த்தியாகி தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புதிய முயற்சிக்கு மாற்றினத்தவர் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவை நனவாக்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு கூடுதலாக கிடைக்கும். சலுகைகளைப் பெற்று சந்தோஷமடைவீர்கள். புதிய திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் விதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது.
தனுசு - புதன் சஞ்சாரம்
கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சேமிப்பு உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலம் சில பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் இப்பொழுது நல்ல முடிவிற்கு வரும். அண்ணன், தம்பிகள் ஆதரவோடு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 'பழைய வாகனங்கள் பழுதாகிப் பழுதாகிச் செலவு வைக்கின்றதே' என்று கருதிப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
ரிஷப -செவ்வாய் சஞ்சாரம்
கார்த்திகை 13-ந் தேதி ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சுக ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் சுகக்கேடுகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். நீண்ட நாட்களுக்கு முன் நடைபெற்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம். இதனால் இனிமை தராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.
தனுசு - சுக்ரன் சஞ்சாரம்
கார்த்திகை 21-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். பொருளாதார நிலை உயரும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர். பணிபுரியும் இடத்தில் உங்கள் கை மேலோங்கும். ஆடை, ஆபரண சேர்க்கையுண்டு.
இம்மாதம் பஞ்சமி திதியில் பைரவர் வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 21, 22, 26, 27, டிசம்பர்: 3, 4, 7, 8. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் விரய ஸ்தானத்தில் இருக்கும் சனியும், தன ஸ்தானத்தில் இருக்கும் குருவும் பலம் பெற்றிருக்கிறார்கள். எனவே வரவும், செலவும் சமமாகும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உங்கள் பெயரில் வாங்கிய சொத்துக்களை விற்க நேரிடும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.