வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை
செயலாற்றல் மிக்கவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே சனி பகவான் சஞ்சரிக்கிறார். ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பொருளாதார நிலையிலும் பற்றாக்குறை ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு கரையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு பாடுபட்டாலும், அதிகாரியின் ஆதரவைப் பெற இயலாது. திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.
ராகு-கேது சஞ்சாரம்
பின்னோக்கிச் செல்லும் கிரகங்களில், ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். கேது 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது தாமதப்படும். சில சலுகைகள் உங்களுக்கு மறுக்கப்படலாம். பூர்வீக சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். பாகப்பிரிவினைகளில் குழப்பங்கள் அதிகரிக்கும். தேக நலனில் அக்கறை தேவை. தெய்வ பலம் உங்களுக்கு கை கொடுக்கும். என்றாலும் குறிப்பிட்ட நாளில் சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாமல் போகலாம். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்துகொள்ளுங்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகளைப் பெற முடியும்.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், சூரியனுடன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், உத்தியோக உயர்வும் வந்துசேரும். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். தொழில் செய்பவர்களுக்கு, தொழில் நடைபெறுவதில் இழுபறி நிலை இருக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு விலகிச் சென்ற வாய்ப்பு மீண்டும் வந்து சேரும். மாணவர்கள் பாடங்களில் மனதைச் செலுத்தி குறிப்பிட்ட இலக்கை அடைவார்கள். பெண்களுக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். அசையாச் சொத்துகளை உங்கள் பெயரில் வாங்கும் யோகம் வாய்க்கும். பணவரவு திருப்தி தரும். பணிபுரிபவர்களுக்கு யோகமான நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 20, 21, 31, ஜூன்: 1, 5, 6, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.