ஓட்டுப்போட ஆர்வம் இல்லாத இளைஞர் சமுதாயம்

இன்றைய இளைஞர்கள் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநல தேடுதலோடு தங்கள் எல்லைகளை சுருக்கிக்கொள்கிறார்கள்.

Update: 2024-04-15 00:54 GMT

சென்னை,

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமான 19-ந்தேதி ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது. நமது ஜனநாயகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுப்போடும் உரிமை படைத்தவர்களாவார்கள். மக்களாட்சி நடக்கும் இந்தியாவில், மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி தங்களுக்கு பிடித்த ஆட்சியை மக்களே ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள்.

அந்த வகையில், 18-வது முறையாக ஆளப்போகும் மத்திய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப்போகும் தேர்தல் இப்போது நடக்கிறது. இதற்காக 1-1-2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி பல மாதங்களாக நடந்தது. புதிய வாக்காளர்கள் நிறைய பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று நினைத்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சம் என்று கணக்கிட்டிருந்த நிலையில், 1 கோடியே 80 லட்சத்துக்கு சற்று அதிகமான இளைஞர்கள்தான், அதாவது 38 சதவீத இளைஞர்கள்தான் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் புதிய மாநிலமான தெலுங்கானாவில்தான் அதிகபட்சமாக 66.7 சதவீத புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். மிகக் குறைவாக உத்தரபிரதேச மாநிலத்தில் 23 சதவீதமும், டெல்லியில் 21 சதவீதமும், கடைசி இடம் பிடித்த பீகாரில் 17 சதவீதமும் புதிய வாக்காளர்களாக இணைந்திருக்கிறார்கள். அரசியல் விழிப்புணர்வு மிகுந்த தமிழ்நாட்டில் 50 சதவீத இளைஞர்கள்தான், அதாவது 9 லட்சத்து 18 ஆயிரம் பேர்தான் முதல்முறை வாக்காளர்களாக இருக்கிறார்கள். ஏறத்தாழ 20 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டிய நிலையில், இவ்வளவு குறைவாக சேர்ந்திருப்பது மனக்குறையாக இருக்கிறது.

ஏனெனில், தமிழக அரசியலில் ஒரு காலத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியது மாணவர்களே. அறிஞர் அண்ணாவில் தொடங்கி பல தலைவர்கள் மாணவப்பருவத்தில் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள். மொழிப்போராக இருந்தாலும் சரி, தமிழை வளர்க்கும் போராட்டங்களாக இருந்தாலும் சரி, மாணவர்களே கச்சை கட்டிக்கொண்டு களத்தில் நின்றார்கள். அப்போது கல்லூரிகளில் மாணவர் பேரவைக்கு நடந்த தேர்தல்களில் கூட கட்சி அரசியல்தான் தூக்கலாக இருந்தது. எந்தவொரு அரசியல் திட்டத்தை பற்றியும் அரசு பணிகளைப்பற்றியும் தீவிரமாக விவாதிக்கும் போக்கு மாணவர்களிடம் இருந்தது. தேநீர் கடைகளில் தினத்தந்தியின் தலைப்பு செய்தியே மாணவர்களுக்கு பட்டிமன்ற பொருளானது. அப்போதைய இளைஞர்கள், குறிப்பாக 18 வயது நிரம்பியவர்கள், அரசியல் விழிப்புணர்வும் சமூக அக்கறையும் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். தமிழக அரசியலை மாணவர்கள்தான் தீர்மானிக்கும் நிலை கொடிகட்டி பறந்தது.

ஆனால், இன்றைய இளைஞர்கள் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநல தேடுதலோடு தங்கள் எல்லைகளை சுருக்கிக்கொள்கிறார்கள். தங்களை ஆளப்போகிறவர்களை தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய உரிமை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசமைக்கபோவது யார்? என்பதை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஜனநாயக கடமையாற்ற ஒரு உபகரணம்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது என்பதை உணராமல் இருப்பது கவலையளிக்கிறது. எனவே, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மிக தீவிரமாக நடப்பதுபோல, புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் ஆண்டுதோறும் சேர்ப்பதை உறுதிசெய்ய கல்லூரிகளுக்கே நேரடியாக சென்று மாணவர்களிடம் புரியவைக்கவேண்டும். இதற்கான நடைமுறைகளும் எளிதாக்கப்படவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்