தமிழக தொழிலதிபர்களுக்கு வெளிமாநிலங்களில் அழைப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

Update: 2024-08-26 00:42 GMT

சென்னை,

"தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவேண்டும். தமிழ்நாடு தொழில் மயமாகவேண்டும்" என்ற நோக்கில், தமிழக அரசும், குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அரும் பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறார்கள். இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுடைய தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்க அழைக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளிலுள்ள தொழில் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு என்னென்ன உகந்த சூழ்நிலைகள் இருக்கின்றன? இங்கு தொழில் தொடங்கினால் அரசு சார்பில் என்னென்ன வசதிகள், சலுகைகள் அளிக்கப்படுகின்றன? என்று விளக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதே நேரத்தில், சமீபத்தில் சத்தமில்லாமல் மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் தன் குழுவினரோடு கோயம்புத்தூர் வந்து தொழிலதிபர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். மத்திய பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று அழைத்ததோடு, தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில், அங்கு தமிழக தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கினால் என்னென்ன சலுகைகள் வழங்கப்படும்? என்று கூறி வலை விரித்தார். அவர் வந்ததன் முக்கிய நோக்கமே திருப்பூர், கோவையில் பின்னலாடை தொழில் எப்படி கொடிகட்டி பறக்கிறதோ, அதேபோல மத்திய பிரதேசமும் புகழ் பெற்று விளங்கவேண்டும் என்பதுதான்.

மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூரை இன்னொரு திருப்பூராக்க வேண்டும், கோயம்புத்தூராக்க வேண்டும் என்பதைத்தான் அவர் இலக்காக கொண்டுள்ளார். "அங்கு ஜவுளித்தொழிலை தொடங்கினால் நிலம், கட்டிடம், எந்திரம் வாங்க செலவாகும் மூலதன நிதியில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதுவே ஆதிதிராவிடர், பெண்களாக இருந்தால் கூடுதலாக 8 சதவீத மானியம், ஏற்றுமதி செய்தால் மேலும் 12 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆக மொத்தம் 60 சதவீதம் வரை அதிகபட்சமாக மானியம் கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல் வட்டி மானியம் 5 முதல் 7 சதவீதம் வரை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மின்சாரம் யூனிட் ரூ.5-க்கு வழங்கப்படும், விசைத்தறிகளுக்கு 150 எச்.பி. திறன் கொண்ட மின்சார பயன்பாட்டுக்கு ரூ.1.25 சலுகை வழங்கப்படும் என்பதோடு நிறுத்திவிடாமல், தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் அரசு வழங்கும்" என்று உறுதியளித்து இருக்கிறார்.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து இங்குள்ள தொழிலதிபர்கள் மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க ரூ.2,500 கோடிக்கான முதலீட்டு திட்டங்களுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதெல்லாம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட வேண்டிய திட்டங்களாகும். இதற்கு முன்பாக மராட்டியம், ஒடிசா, பீகார் மாநில அரசாங்க அதிகாரிகள் திருப்பூர் வந்து தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க இதே முயற்சிகளை எடுத்தனர். ஆந்திராவும் இப்போது தமிழ்நாட்டிலுள்ள தொழில்கள் மீது கண் வைத்துவிட்டது. ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்தபோது, தமிழக எல்லைக்கு அருகில் ஸ்ரீசிட்டியை தொழில் கேந்திரமாக்கி தமிழக தொழில்களை ஈர்க்க முயற்சி செய்த சந்திரபாபு நாயுடு, இப்போது மேலும் பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆக, தமிழக தொழில் துறை மிக கவனமாக காய் நகர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநில முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்லாமல் இங்கேயே கால் பதிக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்