வேகமாக சரியும் ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.
சென்னை,
இந்திய ரூபாயின் மதிப்பு பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க டாலருக்கு இணையாக எவ்வளவு இருக்கிறது? என்பதும் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. தற்போது வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.49 ஆகத்தான் இருந்த நிலையில், நேற்று ரூ.85.27 என எகிறியது. இது இதுவரையில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியாகும். இதனால் இந்தியா, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அதிக பணம் கிடைக்கும் என்றாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது அதிக பணம் கொடுக்க வேண்டியது இருக்கும்.
ரூபாய் மதிப்பு சரிந்து வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் நமது ஏற்றுமதியைவிட இறக்குமதி மிகவும் அதிகமாக இருக்கிறது. இதில் தங்கத்தின் இறக்குமதி உச்சத்தில் உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்ட பிறகு கள்ளக்கடத்தல் குறைந்து அதிகாரப்பூர்வ இறக்குமதியே அதிகமாகிவிட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ரூ.15 ஆயிரத்து 770 கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட பிறகு, ஜூன் மாதத்தில் ரூ.25 ஆயிரத்து 398 கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த இறக்குமதி மாதந்தோறும் உயர்ந்து கடந்த நவம்பர் மாதம் எவ்வளவு தெரியுமா? 14.9 பில்லியன் டாலர் மதிப்பிலான அதாவது, ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 82 கோடி மதிப்பிலான தங்கம் வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கு தீபாவளி, திருமண சீசன் ஒரு காரணம் என்றாலும், மக்கள் சேமிப்புக்காக இப்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துவிட்டது. இதுபோல செல்போன், உலோகங்கள், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற எரிசக்தி ஆகியவற்றின் இறக்குமதியும் காரணமாகும். அதே நேரத்தில் நமது ஏற்றுமதி கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் 4.83 சதவீதம் குறைந்து இருக்கிறது. ஆனால் இறக்குமதி 27 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாகி வர்த்தக பற்றாக்குறை, இதுவரையில் இல்லாத அளவுக்கு ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 72 கோடியாக இருந்ததும், ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இதுதவிர அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து இருப்பதும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் வரும் 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் குறைக்கப்படும் என்ற தகவல் பரவுவதாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் இருந்து வெளியேறி டாலரில் முதலீடு செய்வது அதிகரித்து இருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வித்திடும் வகையில் அமைந்துவிட்டது. இத்தகைய பல்வேறு காரணங்களால் வருகிற மாதங்களில் இந்தியாவில் வெளிநாட்டு இறக்குமதியை நம்பி இருக்கும் பொருட்களின் விலை உயர்ந்து, இப்போது இருக்கும் விலைவாசி இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பல பற்றாக்குறைகளுக்கும், பாதிப்புகளுக்கும் மூலக்காரணமாக அமைந்துவிட்டது.