ஆங்கிலப் பெயர்களும் இருக்க வேண்டும்!

பழைய இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் இருந்தன.

Update: 2024-07-02 05:03 GMT

சென்னை,

இந்தியாவில் காலாகாலமாக இருந்த இந்திய தண்டனை சட்டம், அதாவது "இந்தியன் பீனல் கோடு", குற்றவியல் நடைமுறை சட்டம், அதாவது "கிரிமினல் புரொசிஜர் கோடு", இந்திய சாட்சியங்கள் சட்டம், அதாவது "இந்தியன் எவிடன்ஸ் சட்டம்" ஆகியவை நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளன. அவைகளின் பெயர்களும் ஆங்கிலத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டுள்ளன. 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்றும், 1973-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்றும், 1872-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய சாட்சியங்கள் சட்டம், பாரதிய சாக்ஷ்ய அதினயம் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பழைய இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் இருந்தன. அது இப்போது 358 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதுபோல, பழைய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 531 பிரிவுகள் இருந்த நிலையில், இப்போது 484 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளன. இந்திய சாட்சியங்கள் சட்டத்தில் 170 பிரிவுகள் இருந்த நிலையில், புது சட்டத்தில் 166 பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. பா.ஜனதாவின் முந்தைய ஆட்சி காலமான கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி இந்த சட்டங்களுக்குரிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது உறுப்பினர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து அறிக்கை பெற்ற பின்பு டிசம்பர் மாதம் 20, 21, 25-ம் தேதிகளில் எந்தவித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இந்த புதிய சட்டங்கள் மூலம், "ஒரு இடத்தில் நடந்த சம்பவம் தொடர்பான புகாரை எந்த ஊரில் உள்ள போலீஸ் நிலையத்திலும் கொடுத்து முதல் தகவல் அறிக்கை என்ற எப்.ஐ.ஆரை பதிவு செய்ய முடியும். போலீஸ் நிலையத்துக்கு செல்லாமலேயே ஆன்லைன் மூலமாக புகார் கொடுக்க முடியும். கடுமையான குற்றங்கள் நடந்த இடத்தில் புலன் விசாரணை செய்யும்போது வீடியோ எடுக்கவேண்டும். சம்மன்கள் அனுப்பும்போது செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். யாரையாவது போலீசார் கைது செய்ய நேரிட்டால், குற்றவாளி குறிப்பிடும் ஒருவருக்கு தகவல் சொல்லலாம். குற்றவியல் வழக்குகளில் விசாரணை முடிந்து 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும். நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய நாளிலிருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஒரு பெண் போலீஸ் அதிகாரி, அந்த பெண்ணின் உறவினர்கள் முன்னிலையிலேயே பதிவு செய்யவேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கை 7 நாட்களுக்குள் கிடைக்கவேண்டும்" என்பது போன்ற பல நல்ல அம்சங்கள் இருந்தாலும், சில பிரிவுகள் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றன.

ஆனால், குற்றங்களுக்கான பழைய சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை இப்போது மாற்றப்பட்டுள்ளதால் இதுகுறித்து இன்னும் பல காலத்துக்கு குழப்பங்கள்தான் நீடிக்கும். ஜூலை 1-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நடந்து வரும் விசாரணைகள் ஆங்கில பெயரிலேயே கையாளப்படும். 1-ம் தேதிக்கு பிறகு பதிவு செய்யப்படும் புகார்கள், வழக்குகள், விசாரணைகள் சமஸ்கிருத பெயர்களில் மட்டுமே கையாளப்படும் என்பது எல்லோருக்கும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. மேலும், ஒரு சிலருக்கு மட்டுமே புரியும் சமஸ்கிருத பெயர்களில் இருப்பதோடு, இவ்வளவு காலமும் பயன்படுத்தி வந்த உலகளாவிய மொழியான ஆங்கிலத்திலும் இந்த பெயர்கள் இருக்கவேண்டும். இரு பெயர்களையும் பயன்படுத்தலாம் என்பதே மக்களுடைய கோரிக்கை மட்டுமல்லாமல், நீதித்துறை வல்லுனர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது. ஆங்கில பெயர்களை முழுமையாக கைவிடுவது என்பது ஏற்புடையது அல்ல.

Tags:    

மேலும் செய்திகள்