வானத்தில் ராஜாங்கம் நடத்தப்போகும் மகாராஜா!

Update: 2023-03-01 19:07 GMT

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அடையாள சின்னம் பயணிகளை வரவேற்கும் மகாராஜா. சமீப காலம் வரை பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனம், பெரும் கடன் சுமையால் தத்தளித்தது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய டாட்டா நிறுவனம், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இதன் முழு நிர்வாகத்தையும் எடுத்துக்கொண்டது. உடனடியாக, ஏர் இந்தியா நிறுவனத்தை, தன் விஸ்தாரா விமான நிறுவனத்துடன் இணைத்ததால், பெரிய விமான நிறுவனமாக தலையெடுத்தது.

இப்போது, இந்தியாவில் சர்வதேச வழித்தடத்தில் விமான போக்குவரத்தை இயக்கும் பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியாதான். உள்நாட்டு போக்குவரத்தைப் பொருத்தமட்டில், இண்டிகோ விமான நிறுவனம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் இரண்டாம் இடத்தில்தான் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, டாட்டா நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் எடுத்தபோது, அதன் மொத்த கடன் ரூ.61 ஆயிரத்து 562 கோடியாக இருந்தது. இதில் ரூ.15 ஆயிரத்து 300 கோடியை டாட்டா நிறுவனம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அந்த கடனையும் அடைத்துவிட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 218 விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானங்கள் உலகில் 38 நகரங்களுக்கும், உள்நாட்டில் 52 இடங்களுக்கும் பறந்து செல்கின்றன. இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவிலுள்ள போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும் என மொத்தம் 470 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6.40 லட்சம் கோடியாகும். இதுமட்டுமல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் விருப்புரிமை மற்றும் கொள்முதல் உரிமை அடிப்படையில் 370 விமானங்கள் வாங்குவதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். 16 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல 111 விமானங்களை வாங்கியது. உலகிலேயே ஒரே சமயத்தில் அதிக விமானங்களை வாங்கும் நிறுவனம் என்ற பெருமையை இப்போது ஏர் இந்தியா பெற்றுள்ளது.

ஏர் இந்தியாவுக்கு அடுத்தாற்போல, 2011-ல் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் 460 விமானங்களை வாங்கியது. இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் உள்ள 44 மாகாணங்களில், 10 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறியுள்ளார். இதுபோல, பிரான்ஸ் நாட்டிலும் இந்த ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்பு பெருகும். இதன் பலனாக, இந்தியாவிலும் வேலைவாய்ப்பு பெருக மத்திய அரசாங்கம் முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், உள்நாட்டு உற்பத்தி உயருவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் வழி இருக்கிறது என்கிறார், டாட்டா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன்.

இது மகிழ்ச்சி என்றாலும், சீனா இதுபோல ஏர் பஸ் விமானங்களை வாங்கியபோது, உதிரி பாகங்களைக் கொண்டுவந்து விமானமாக உருவாக்கும் வசதி அங்குதான் செய்யப்பட்டது. அதுபோல, ஏர் பஸ் நிறுவனத்திடமும், போயிங் நிறுவனத்திடமும் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அதுபோன்று விமானங்களை உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்க வலியுறுத்தவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்