ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- கேரளா அணிகள் இன்று மோதல்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை சந்திக்கிறது.

Update: 2022-12-19 00:40 GMT

image courtesy: Chennaiyin FC twitter

சென்னை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்றிரவு (திங்கட்கிழமை) நடக்கும் ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை சந்திக்கிறது.

நடப்பு தொடரில் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 4 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி என்று 13 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கேரளா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி) 6-வது இடம் வகிக்கிறது.

இதையொட்டி சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறுகையில், முந்தைய ஆட்டத்தில் 7-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை வீழ்த்தியது எங்களது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இப்போது எங்களது முழு கவனமும் கேரளா ஆட்டம் மீதே உள்ளது. எங்களது அணி நல்ல நிலையில் உள்ளது. எதிரணியை நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களை தவறிழைக்க வைத்து அதை சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.' என்றார்.

கடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை பதம் பார்த்த கேரளா அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி விடும். அதனால் வரிந்து கட்டி நிற்பார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சென்னையும், 5-ல் கேரளாவும் வெற்றி பெற்றன. 7 ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்