'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர்; இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்ற சிரியா

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் சிரியா வெற்றி பெற்றது.

Update: 2024-09-10 07:06 GMT

Image Courtesy: @IndianFootball

கச்சிபவுலி,

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, மொரீசியஸ், சிரியா அணிகள் கலந்து கொண்டு ஆடின. இதில் இந்திய அணி, மொரீசியசுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 0-0 என (செப்டம்பர் 3) டிரா கண்டது.

அடுத்து மொரீசியஸ் - சிரியா அணிகளுக்கு இடையிலான 2வது லீக் ஆட்டத்தில் சிரியா 2-0 என்ற கோல் கணக்கில் மொரீசியஸை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் இந்தியா - சிரியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சிரியா வெற்றி பெற்றது. சிரியா தரப்பில் முகமது அல் அஸ்வாத் (7வது நிமிடம்), டேல்ஹோ மொசின் (76வது நிமிடம்), பாப்லோ சபாக் (90+6வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிரியா (6 புள்ளி) புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. மொரீசியஸ், இந்தியா (தலா 1 புள்ளி) அணிகள் புள்ளிபட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தன.


Tags:    

மேலும் செய்திகள்