உலகக்கோப்பை கிரிக்கெட்; வெற்றிப்பயணத்தை தொடருமா நியூசிலாந்து ..? - ஆப்கானிஸ்தானுடன் நாளை மோதல்...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோத உள்ளன.
சென்னை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்நிலையில் தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோத உள்ளன. இதுவரை 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.
அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் நாளை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்க காத்துக்கொண்டுள்ளது. ஆட்டம் நடைபெறும் சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆட்டம் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.