மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி...!

இந்திய வீராங்கனை சினே ராணா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Update: 2023-12-24 07:51 GMT

image courtesy; twitter/ @BCCIWomen

மும்பை,

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 119 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்து, 157 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 406 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 187 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 105.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 75 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலியா. அந்த அனியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 73 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக சினே ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் அடித்தார். இந்திய வீராங்கனை சினே ராணா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 டெஸ்டில் விளையாடியுள்ள இந்தியா அதில் 4-ல் தோல்வியும், 6-ல் டிராவும் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்