மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்த இந்தியா..!

இந்தியா தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர்.;

Update:2023-12-15 11:00 IST

Image Courtesy: @BCCIWomen

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்திருந்தது. தீப்தி ஷர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தீப்தி ஷர்மா 67 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரேனுகா சிங் 1 ரன்னிலும், கயக்வாட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி 104.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்