மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 157 ரன்கள் முன்னிலை..!

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 219 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;

Update:2023-12-22 17:28 IST

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 219 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் அரைசதம் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர்.

2-ம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 376 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி இதுவரை 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தீப்தி ஷர்மா 70 ரன்களிலும், பூஜா வஸ்த்ரகர் 33 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்