பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அபார பந்துவீச்சு - குஜராத் 126 ரன்கள் சேர்ப்பு

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Update: 2024-02-25 15:37 GMT

Image Courtesy: @wplt20

பெங்களூரு,

பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 2 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் பெத் மூனி 24 ரன்னிலும், வேதா கிருஷ்ணமூர்த்தி 0 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வீராங்கனைகள் மும்பையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதில் ஹார்லீன் தியோல் 8 ரன், போப் லிட்ச்பீல்ட் 7 ரன், தயாளன் ஹேமலதா 3 ரன், ஆஷ்லே கார்ட்னெர் 15 ரன், சினே ராணா 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக தனுஜா கன்வர் 28 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்