வெற்றி பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

Update: 2024-05-11 23:40 GMT

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு பிரச்சினையின்றி முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் ஒன்றில் மட்டும் வென்றால் ரன்-ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைய வேண்டியது அவசியமானதாகும்.

ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றை (பிளே-ஆப்) நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

அடுத்த சுற்றுக்குள் நுழைய ராஜஸ்தான் அணியும், முந்தைய ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக தோல்வி கண்டிருந்த சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் என்பதால் இந்த மோதலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி மோதல்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

பெங்களூரு அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் தோற்றால் அதன் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விடும்.

டெல்லி அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அடுத்த சுற்றை எட்ட அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது அத்யாவசியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகும். மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கியதால் டெல்லி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமுடியாது. அவருக்கு பதிலாக இந்த ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் கேப்டன் பொறுப்பை கவனிக்க உள்ளார்.

அடுத்த சுற்று வாய்ப்பில் தொடருவதற்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்