விராட் மற்றும் ரோகித் பேட்டிங்கில் தடுமாற இதுதான் காரணம் - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் மற்றும் ரோகித் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Update: 2024-09-20 11:34 GMT

image courtesy: AFP

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்களும், வங்காளதேசம் 149 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 237 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 67 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் மற்றும் ரோகித் தடுமாற்றமாக விளையாடி தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் விராட் மற்றும் ரோகித் ஆகியோரின் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா துலீப் டிராபி உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடாததுதான் அவர்களது மோசமான பேட்டிங்கிற்கு காரணம். அதனால்தான் இரண்டு நல்ல பந்துகளை சந்தித்த உடன் ரோகித் திணறினார் என விளாசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "இது போன்ற பிட்ச்களில் பேட்டிங் செய்யும்போது முதல் ஒரு மணி நேரம் மிகவும் கடினமாக இருக்கும் அல்லது முதல் பகுதி ஆட்டம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இங்கு பயிற்சியின்போது ரோகித் சர்மாவும் பவுலிங் வீசி இருக்கிறார். மேலும், அவர் உள்ளூர் போட்டிகளிலும் ஆடவில்லை. அவர் தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து அதில் எது சிறந்ததோ அதைத்தான் செய்தார். ஆனால், இரண்டு நல்ல பந்துகள் வந்தவுடன் அவர் தடுமாறத் தொடங்கி விட்டார்.

நான் சில வாரங்கள் முன்பே கூறியபடி ரோகித் மற்றும் விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. அதனால், அவர்கள் நிச்சயம் துலீப் டிராபி தொடரில் விளையாடி இருக்க வேண்டும். அப்படி விளையாடி இருந்தால் அவர்களுக்கு போட்டிக்கான சிறிதளவு பயிற்சி கிடைத்திருக்கும். தற்போது அவர்கள் திடீரென முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அழைக்கப்பட்டவுடன் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்