அவருக்கு எதிராக புதிய பந்தில் நாம் நன்றாக விளையாட வேண்டும் - புஜாரா அறிவுரை
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 ஆஸ்திரேலிய தொடர்களில் ஸ்டார்க் கொஞ்சம் சுமாராக பந்து வீசியதால் இந்திய பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன்கள் அடிக்க முடிந்ததாகவும், தற்போது ஸ்டார்க் முன்னேற்றத்தை கண்டுள்ளதால் அவரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக உள்ளதாகவும் புஜாரா கூறியுள்ளார்.
எனவே ஸ்டார்க்கை முதல் 5 ஓவரில் நன்றாக எதிர்கொண்டு பந்து பழையதான பின்னர் அவருக்கு எதிராக ரன்கள் அடிக்கலாம் என புஜாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தத் தொடரில் ஸ்டார்க் அவர்களுடைய சிறந்த பவுலராக இருக்கிறார். கடந்த ஒன்றரை வருடங்களில் அவர் தனது பந்து வீச்சில் முன்னேற்றத்தை செய்துள்ளார். அவரிடம் ஏற்கனவே நிறைய திறமையும் இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2 தொடர்களில் அவருக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியும் என்று நாங்கள் உணர்ந்தோம்.
ஆனால் தற்போது அவருடைய துல்லியம் முன்னேறியுள்ளது. சில சுமாரான பந்துகளை வீசினாலும் அவர் ஸ்டம்ப் லைனில் பெரும்பாலான பந்துகளை நல்ல லென்த்தில் போடுகிறார். அவருக்கு ஸ்விங் கிடைப்பதால் தற்போது மீண்டும் வித்தியாசமான பவுலராக வந்துள்ளார். அதனால் ஹேசல்வுட், பட் கமின்ஸ் ஆகியோரை விட அவர் மிகவும் ஆபத்தான பவுலராகவும் திகழ்கிறார்.
எனவே அவருக்கு எதிராக குறிப்பாக புதிய பதில் நாம் நன்றாக விளையாட வேண்டும். அவர் பெரும்பாலான விக்கெட்டுகளை முதல் 5 ஓவர்களில் தான் எடுத்துள்ளார். எனவே அந்த 5 ஓவர்கள் நாம் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அந்த இடத்தில் சமாளித்து அவரை 2, 3வது ஸ்பெல்லில் எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது அவர் களைப்பாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.