விராட் கோலிக்கும் உங்களுக்கும் இடையே எம்மாதிரியான உறவு இருக்கிறது..? - தோனி பதில்

உலக கிரிக்கெட்டில் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று தோனி பாராட்டியுள்ளார்.

Update: 2024-09-01 06:57 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இவருடைய வளர்ச்சிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் 2008 அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்த விராட் கோலி தம்முடைய திறமையால் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இருப்பினும் மற்றவர்களைப் போலவே ஆரம்ப காலங்களில் விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறினார்.

அதனால் அவரை நீக்குவதற்கு தேர்வுக்குழுவும் பிசிசிஐயும் முடிவெடுத்ததாக கூறப்பட்டது. அப்போது விராட் கோலியிடம் நல்ல திறமை இருப்பதாக உணர்ந்த எம்.எஸ். தோனி தேர்வுக்குழுவை எதிர்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததாக அப்போதைய துணை கேப்டன் வீரேந்திர சேவாக் கடந்த சில வருடத்திற்கு முன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதே போல தமக்குப்பின் இந்தியாவை தலைமை தாங்குவதற்கு விராட் கோலிதான் சரியானவர் என்று தோனி கருதினார்.

அதனாலேயே இந்தியாவின் கேப்டன்ஷிப் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்த தோனி அவரது தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார். மறுபுறம் எப்போதுமே தோனிதான் தம்முடைய கேப்டன் என்று விராட் கோலி பலமுறை தெரிவித்துள்ளார். அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய காலங்களில் தோனிதான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாகவும் சமீபத்தில் விராட் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில் சக வீரரான விராட் கோலிக்கு தாம் அண்ணனை போன்றவர் என்று தோனி கூறியுள்ளார். அத்துடன் உலக கிரிக்கெட்டில் விராட் கோலிதான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று தோனி பாராட்டியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சியில் விராட் கோலிக்கும் உங்களுக்கும் எம்மாதிரியான உறவு இருக்கிறது? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தோனி பதிலளித்தது பின்வருமாறு:-"நாங்கள் 2008 முதல் விளையாடி வருகிறோம். எங்களுக்கிடையே வயது வித்தியாசம் இருக்கிறது. எனவே அவருக்கு நான் பெரிய அண்ணன் போன்றவரா அல்லது சக வீரராக என்பது தெரியவில்லை. ஆனால் நாளின் இறுதியில் நாங்கள் நாட்டுக்காக விளையாடிய சக வீரர்கள். நாங்கள் இந்தியாவுக்காக நீண்ட காலம் ஒன்றாக விளையாடினோம் என்பது உங்களுக்கு தெரியும். உலக கிரிக்கெட் என்று வரும்போது விராட் கோலி மிகவும் சிறந்தவர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்