சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஓய்வு!

சுனில் நரின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் 165 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.;

Update:2023-11-06 08:53 IST

image courtesy; AFP

புளோரிடா,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் அறிவித்துள்ளார். 35 வயதான நரின் ஓய்வு குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆன நரின் 2012ஆம் அண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அதே ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமாகி அந்த அணி கோப்பை வெல்வதற்கு உதவியதுடன் அந்த தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு தனது அறிமுகத்தை சிறப்பாக தொடங்கிய நரின் 2015ஆம் ஆண்டில் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசியதாக தடை விதிக்கப்பட்டார். பின்னர் 2016ஆம் ஆண்டில் மீண்டும் தடை நீக்கப்பட்டு போட்டிகளில் பந்துவீச அனுமதிக்கப்பட்டார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வந்த நரின் 2019க்கு பின் அணியில் சேர்க்கப்படவில்லை. எனினும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நரின் சர்வதேச போட்டிகளில் 165 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும் சூப்பர் ஓவரை மெய்டனாக வீசிய ஒரே பவுலர் என்ற சாதனையை படைத்தவர்.

Tags:    

மேலும் செய்திகள்