கேப்டன்சியில் தோனி, விராட் , ரோகித் மூவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் - அஸ்வின்

தோனி மற்றும் விராட் கோலியை விட எதிரணியை வீழ்த்துவதற்காக ரோகித் சர்மா நீண்ட நேரம் உட்கார்ந்து திட்டங்களை வகுப்பார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Update: 2024-09-03 02:14 GMT

மும்பை,

நவீன கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் மகேந்திரசிங் தோனி ஆகியோர் போற்றப்படுகின்றனர். அதில் எம்.எஸ். தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 5 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள அவர் மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார்.

மறுபுறம் விராட் கோலி ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பைகளை வென்றதில்லை. ஆனால் 2014-ம் ஆண்டு தோனி ஓய்வு பெற்றபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடியது. அப்போது பொறுப்பேற்ற விராட் கோலி தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் மற்றும் அதிரடியான முடிவுகளால் இந்தியாவை 2016 - 2021 வரை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றினார். அவருடைய தலைமையில்தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அத்துடன் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்தியா வரலாறு காணாத சில வெற்றிகளை பெற்றது.

அவர்களைத் தொடர்ந்து தற்போது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டுமென்ற கோட்பாட்டை ரோகித் சர்மா கடைபிடிக்கிறார். அவரது தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்த தோல்விகளையும் உடைத்துள்ளது.

இந்நிலையில் தோனி மற்றும் விராட் கோலியை விட எதிரணியை வீழ்த்துவதற்காக ரோகித் சர்மா நீண்ட நேரம் உட்கார்ந்து திட்டங்களை வகுப்பார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அந்த மூவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் பற்றி சமீபத்திய பேட்டியில் அஸ்வின் பேசியது பின்வருமாறு:-

"ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி 2 - 3 நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவர் எப்போதும் அணியின் சூழ்நிலையை மிருதுவாக வைத்திருப்பார். அதற்காக அவர் முயற்சிகளை போடுவார். சமநிலையுடன் இருக்கக்கூடிய அவர் தந்திரோபாயங்களில் மிகவும் வலுவானவர். தோனி மற்றும் விராட் கோலியும் அதில் வலுவானவர்கள்தான். ஆனால் ரோகித் சர்மா தந்திரோபாயங்களில் அதிகமாக வேலை செய்வார்.

பெரிய போட்டி அல்லது தொடர் வந்தால் அதற்கு முன்பாக ரோகித் சர்மா பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசனை குழுவுடன் உட்கார்ந்து குறிப்பிட்ட எதிரணி பேட்ஸ்மேனின் பலவீனம் என்ன, எதிரணி பவுலருக்கு எதிராக என்ன திட்டம் வகுக்கலாம் போன்றவற்றில் தயாராவார். அதுதான் அவருடைய பலமாகும். அதே சமயம் அவர் அணியை அமைதியாக வைத்திருந்து அனைத்து வீரர்களுக்கும் ஆதரவு கொடுப்பார். அவர் ஒரு வீரரை தேர்வு செய்து விட்டால் பின்னர் 100% ஆதரவு கொடுப்பார். என்னுடைய கெரியரில் பெரும்பாலும் இந்த 3 கேப்டன்கள் தலைமையில்தான் நான் விளையாடியுள்ளேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்