டி20 உலகக்கோப்பை: 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே திரில் வெற்றி
ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.;
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜிம்பாப்வே-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்கவீரர்களாக களமிறங்கிய வெஸ்லி 17 ரன்களும் கிரேக் எர்வின் 19 ரன்களும் எடுத்தனர். அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஹரிஷ் ரவூப் 1 விக்கெட் எடுத்தார். இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 15 ரன்களிலும் பாபர் அசாம் 4 ரன்களிலும் அவுட்டாகினர்.
பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் 44 ரன்னில் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய இப்திகார் அகமது 5 ரன்களும் ஷதாப் கான் 17 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஹைதர் அலி டக் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.