கே.எல்.ராகுலை நீக்க வேண்டுமா..? பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் கொடுத்த சூர்யகுமார் யாதவ்

நான் அணியின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்திலும் பேட்டிங் ஆட தயாராக உள்ளேன் என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Update: 2022-09-02 03:08 GMT

Image Courtesy: AFP

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் கே.எல்.ராகுல் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடிய நிலையில், சூர்யகுமாரின் அதிரடி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். இதனால் அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா டி-20 போட்டிகளில் அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாடி தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் நிலையில், கே.எல்.ராகுலின் அணுகுமுறை அதற்கு முரணாக இருப்பதாக கருத்துகள் வலம் வந்தன.

போட்டி முடிந்த பின்னர் சூர்ய குமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளார் ஒருவர், டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக கேப்டன் ரோஹித் சர்மாவுடன் நீங்கள் துவக்க வீரராக களமிறங்குவீர்களா? என்று அந்த செய்தியாளர் கேட்டார். அப்போது குறுக்கிட்ட சூர்யகுமார் யாதவ்,

அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? என சிரித்துக்கொண்டே எதிர்கேள்வி கேட்டு மடக்கினார்.

தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ் கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து திரும்பி வந்துள்ளார். அவருக்கு சிறுது அவகாசம் தேவை. நான் முன்பே சொன்னது போல் அணியின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்திலும் நான் பேட்டிங் ஆடுவேன். இதை கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். நான் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என அவர்கள் கூறுவார்கள்.

நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம். அத்திட்டங்களை பயிற்சியின் போது நடைமுறைப்படுத்துவதை விட போட்டியில் நடைமுறைப்படுத்தினால் அது எங்களுக்கு இன்னும் நிறைய யோசனைகளைத் தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்