தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: ஏலத்தில் அதிரடி வீரர்களை வாங்கிய சூப்பர் கிங்ஸ் அணி- முழு வீரர்கள் விவரம்..!!
ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது.;
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது.
இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதல் கட்டமாக 5 முக்கிய வீரர்களை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸிஎன 5 வீரர்களை ஜோகனஸ்பர்க் அணி ஒப்பந்தம் செய்து இருந்தது. இதில் மொயின் அலி இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அணியின் கேப்டனாக டுபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மற்ற வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று நடந்து முடிந்தது. இதில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி சில அதிரடி வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி இளம் வீரராக கருதப்படும் டோனோவன் பெராரியாவை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி தூககியது. 19 டி20 போட்டியில் விளையாடி 384 ரன்களை ஃபெராரியா குவித்துள்ளார். அவருடைய சராசரி 54 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 148 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 47 லட்சம் ரூபாயை கொடுத்து ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.
இதே போன்று இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி புருக்கை 94 லட்சம் ரூபாயை கொடுத்து ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர் ஜேன்னிமான் மாலனை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ளது.
இதே போன்று அதிரடி வீரர் ரீசா ஹெண்டரிக்சையும் சூப்பர் கிங்ஸ் 2 கோடியே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அல்சாரி ஜோசப்பை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:
டுபிளசிஸ், மகீஷ் தீக்சணா, ரோமரியோ ஷிப்பர்ட், ஜெரால்ட் கோயிட்சே, ஹாரி புருக், ஜென்னிமான் மாலன், ரீசா ஹெண்டரிக்ஸ், கையில் வெர்ரையின், ஜார்ஜ் கார்டன், அல்சாரி ஜோசப், லியூஸ் டுபிளாய், லீவிஸ் கிர்காரி, லிசாட் வில்லியம்ஸ், நாண்ட்ரே பர்கர், டோனோவன் பெராரியா, மலூசி சிபாடோ, கேலப் செலிகா