இருதரப்பு டெஸ்ட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதல்?- வெளியான தகவல்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-10-31 16:54 GMT

Image Courtesy: PTI/ AFP

கான்பெரா,

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ஆம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைமன் ஓ'டோனல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அல்லது இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் டி20 உலககோப்பை போட்டியில் மோதின. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர். இது அந்த மைதானத்தில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாக அமைந்தது.

இதனால் வணிக ஆதாயங்களுக்காக ஆஸ்திரேலியா இந்த முயற்சியை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில், இந்தியா, பாக். போட்டியை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததை பிசிசிஐ நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்