விராட் கோலி அல்ல... இந்த இந்திய வீரர்தான் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்வார் - ஆஸ்திரேலிய வீரர்கள் பதில்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-10-06 06:05 GMT

Image courtesy: BCCI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், இந்திய அணியில் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்யக்கூடிய வீரர் யார் என்று ஆஸ்திரேலிய வீரர்களிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஆஸ்திரேலிய வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் ஆச்சரியப்படும் விதமாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தனர். அதில் மார்னஸ் லபுஸ்ஷேன் "கால் சட்டையை" பலகையில் வரைந்து காட்டி "பண்ட்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்